சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வழங்கினார்.

சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வழங்கினார். சமூக சீர்திருத்தம், மகளிர்
மேம் பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை களில் சிறப்பாக தொண்டாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் உலக மகளிர் தினத்தையொட்டி ‘அவ்வையார் விருது’ வழங்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, 2012-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது. ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி, தங்கப் பதக்கம் அணிவித்து சான்றிதழையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இத்தகவலை அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கம் சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014-ம் ஆண்டுக்கான ‘அவ்வையார்’ விருதை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.