‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் அரவிந்த் பனகரியா நியமிக்கப்பட்டார்.

‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத்தலைவராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் அரவிந்த் பனகரியா நியமிக்கப்பட்டார். 7 மத்திய மந்திரிகளும் இடம்பெற்றுள்ளனர். நிதி ஆயோக் 65
ஆண்டுகளாக இயங்கி வந்த திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று கடந்த சுதந்திர தின உரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிறகு அவர் கடந்த மாதம், முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில், திட்ட கமிஷனுக்கு பதிலாக ‘நிதி ஆயோக்’ என்ற புதிய அமைப்பு, கடந்த 1-ந்தேதி உருவாக்கப்பட்டது. இது, பிரதமர் தலைமையில¢ செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. நியமனம் இந்நிலையில், மற்ற பதவிகளுக்கு உரியவர்களை பிரதமர் மோடி நேற்று நியமித்தார். அதன்படி, ‘நிதி ஆயோக்’ துணைத்தலைவராக அரவிந்த் பனகரியா நியமிக்கப்பட்டார் முதலாவது துணைத்தலைவர் என்ற பெருமையை இவர் பெறுகிறார். 62 வயதான இவர், அமெரிக்கவாழ் இந்திய பொருளாதார வல்லுனர் ஆவார். அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு, ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார வல்லுனராகவும், மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பொருளாதார மைய துணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். மேலும், உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு, வர்த்தக மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பு ஆகியவற்றில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துக்கான பிஎச்.டி. பட்டமும் பெற்றுள்ளார். மத்திய மந்திரிகள் பொருளாதார வல்லுனர் விபேக் தேவ்ராய், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி மையத்தின் முன்னாள் தலைவர் வி.கே.சரஸ்வத் ஆகியோர் ‘நிதி ஆயோக்’கின் முழு நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுரேஷ் பிரபு, ராதாமோகன் சிங் ஆகியோர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, தாவர்சந்த் கெலாட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.